Saturday 27th of April 2024 05:21:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 32 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 32 (வரலாற்றுத் தொடர்)


"சமஷ்டிக் கோரிக்கையும் தமிழ்த் தேசிய எழுச்சியும்" - நா.யோகேந்திரநாதன்!

"இந்நாட்டின் குடியுரிமைச் சட்டங்களாலும் முன்னைய அரசாங்கம் பின்பற்றியதும் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து பின்பற்ற விரும்புவதுமான குடியேற்றத்திட்டக் கொள்கைகளாலும் பல்வேறு தவறுகளாலும் பிழைகளாலும் இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் இனிமேல் ஒற்றையாட்சியின் கீழ் தொடர்ந்து வாழ முடியாது என்பதை உணரத் தொடங்கி விட்டனர். சமஷ்டி அரசுக்கான கோரிக்கை மொழிப் பிரச்சினையின் காரணமாக இப்போது எழுந்த ஒன்றல்ல. இந்நாட்டின் சிறுபான்மையினர் எதிர்காலம் பற்றிய பயம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழ் பேசும் மக்களின் அரைப்பகுதியினர் குடியுரிமை இழந்து வாக்குரிமையிழந்து தற்போது நாடற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். முன்னைய அரசாங்கம் பின்பற்றிய குடியேற்றக் கொள்கைகள் காரணமாகக் கிழக்கு மாகாணம் முழுவதுமே இன முறுகல்களையும் மோதல்களையும் நடைமுறையில் காண்கின்றோம். அப்படியிருந்த போதிலும் அதே கொள்கையைப் பின்பற்றும் நீங்கள் எங்கள் மேல் நல்லெண்ணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறீர்கள்.

அதனாலேயேதான் நரகத்திற்கும் நல்லெண்ணத்துடன் தான் பாதை வகுக்கப்பட்டுள்ளது என்று கூறவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக உங்கள் நல்லெண்ணத்தை நாங்கள் நம்புகிறோம். ஆனால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிவோம். ஆகையால் நம்பிக்கையின் பேரில் நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

மொழிப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டு நோக்கினாலும் இந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை நோக்கும்போது நாம் பிரிந்தாலொழிய எமது எதிர்காலம் பாதுகாப்பாக அமையாது என்பதை நாம் கடந்த எட்டு, ஒன்பது வருடங்களாக உணர்ந்து வருகிறோம். பிரிவது என்று கூறும்போது அது முற்றாகப் பிரிவது என்று அர்த்தமல்ல. இலங்கையின் ஒரு பாகமாகவே இருக்க நாம் விரும்புகிறோம். ஆனால், அது ஒற்றையாட்சி கொண்ட அரசின் கீழல்ல."

இது 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக் கவினால் சிங்களம் மட்டுமே இலங்கையில் அரச கரும மொழியாக்கிய மசோதா முன்வைக் கப்பட்டபோது அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், கோப்பாய்த் தொகுதி உறுப்பினருமாகிய அமரர் கு.வன்னியசிங்கம் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

அதாவது தனிச் சிங்களச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் முதலாவது அநீதி அல்ல என்பதையும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் போன்ற சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் என்பதையும் அவர் தனது உரையில் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

அதேவேளையில் எவ்வாறு கடந்த கால அனுபவங்கள் ஒற்றையாட்சியின் கீழ் சிறுபான்மையினர் உரிமை கொண்ட மக்களாக வாழமுடியாது என்பதைiயும் சமஷ்டிக் கோரிக்கை தவிர்க்கமுடியாதது என்பதையும் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தார்.

ஆறுமுகநாவலர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இன, மத சுயாதிபத்திய உணர்வுகளை பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் முதலியோர் அதே வீச்சுடன் முன்னெடுக்க முடியாவிட்டாலும் தமிழர் என்ற அடையாளத்தை வலியுறுத்தப் பின்நிற்கவில்லை. ஆனால் அவர்களின் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடி இயல்பு காரணமாகவும் அவர்களின் அரசியல் கொழும்பை மையப்படுத்தி அமைந்திருந்ததாலும் அவர்களால் அவ்வுணர்வுகளை மக்கள் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்லமுடியவில்லை.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் மேட்டுக்குடி இயல்பு கொண்டவராகவும் கொழும்பு மைய அரசியல் வட்டத்தில் நிற்பவராயிருந்தாலும் அவரால் முன்வைக்கப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையும் அதற்காக அவர் மேற்கொண்ட பிரசாரங்களும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாகப் படித்த நடுத்தர மக்களிடம் இன உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

அக்கோரிக்கை தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குத் தங்கள் பாதுகாப்புப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. எனவே தனது அரசியல் தேவைகளுக்கு அவற்றை ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஊக்குவித்து முன்னெடுத்தமை காரணமாக தமிழர்களின் இன உணர்வு அரசியல் களத்திலும் மிளிர ஆரம்பித்தது.

அதேவேளையில் இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ் மக்களின் அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டமை, மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டமை, தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திணிக்கப்பட்டமை போன்ற தமிழ் மக்கள் மீதான இன அடிப்படையிலான அநீதிகள் தமிழ் மக்களை இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தட்டியெழுப்பின. இப்படியான அநீதிகளுக்கு எதிராகத் தமிழர் தரப்பினர் செய்த பிரசாரங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தமிழ்த் தேசிய உணர்வை எழுச்சி பெற வைத்தன.

இப்படியான ஒரு சூழ்நிலையில் மலையக மக்களை நாடற்றவர்களாக்கிய மசோதாவுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆதரவளித்ததைக் காரணமாகக் கொண்டு தமிழ்க் காங்கிரஸை விட்டு வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி. நாகநாதன், சி.வன்னியசிங்கம் போன்றோர் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்து தமிழரசுக் கட்சியை 1949ல் ஆரம்பித்தனர். இக்கட்சியும் கட்சியின் பிரசாரங்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வைக் கிளர்ந்தெழ வைப்பத்திலும் தமிழ் மக்கள் உரிமையுள்ள இனமாக வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பதிலும் காத்திரமான பங்கை வகித்தன.

இதில் நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் தமிழரசுக் கட்சியின் உருவாக்கமும் அது முன்வைத்த கொள்கைகளும் தீவிர பிரசாரங்களும் தமிழ்த் தேசிய உணர்வை பரந்துபட்ட தமிழ் மக்கள் மத்தியில் தீவிரமான முறையில் எழுச்சி பெற வைத்தன.

இன்னொருபுறம் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஈ.வே.ரா.பெரியார் தலைமையில் உருவான திராவிடக் கழகம் முன்னெடுத்த ஆரிய, பிராமணிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதன் காரணமாக அங்கு தட்டியெழுப்பப்பட்ட தமிழ் உணர்வும் இலங்கைத் தமிழ் அரசியலுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தன. பெரியாரிலிருந்து பிரிந்து சி.என்.அண்ணாத்துரையால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் அது முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் அவர்களின் பிரசார ஆற்றலும் படித்த தமிழ் இளைஞர்கள் மத்தியில் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்ட உணர்வை மேலும் தூண்டி விட்டன. தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை அணி திரட்டுவதிலும் தமிழரசுக் கட்சி ஓரளவு வெற்றி கண்டது.

1952ல் இடம் பெற்ற தேர்தலில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழரசுக் கட்சி களமிறங்கியது. அதேவேளையில் 1951ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவால் அதே ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்த்தன போன்ற இடது சாரிகளுடனும் வேறுசில சிறிய கட்சிகளுடனும் இணைந்து மக்கள் ஐக்கிய முன்னணி (மகாஜன எக்ஸத் பெரமுன) என்ற கூட்டமைப்பை உருவாக்கி 1952 தேர்தலில் களமிறங்கினார்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு பிரித்தானியப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டிருந்த பல நாடுகள் விடுதலைப் போராட்டங்களின் மூலம் சுதந்திரம் பெற்றன.

தேசிய விடுதலைப் போராட்டங்களின் போது மக்கள் மத்தியில் உருவான தேசிய உணர்வானது விடுதலை பெற்ற நாடுகளின் மக்களிடம் தாம் அந்நிய ஆட்சியில் இழந்து போயிருந்த தேசிய இன அடையாளங்களை மீட்டெடுத்து பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமென்ற உணர்வை வலுப்பெற ஆரம்பித்தது.

ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மேலோங்கிய அந்த உணர்வு இலங்கையில் முளை விட்டதன் வெளிப்பாடே சிங்கள மகா சபை, தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் தோற்றமாகும்.

ஏகாதிபத்திய சார்பு, மேட்டுக்குடி ஐக்கிய தேசியக் கட்சி அரசியலதிகாரத்துக்கு எதிரான தேசிய அரசியலதிகாரத்தை உருவாக்கும் முகமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. அதேபோன்று தமிழ்க் காங்கிரஸ் தனிக் கட்சியாக இருந்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பங்கு கொண்டு, அதே கொள்கைகளைப் பின்பற்றிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை நிராகரித்து தமிழரசுக் கட்சி உருவானது.

எனவே இவ்விரு கட்சிகளின் தோற்றமும் உலகளாவிய தேசிய எழுச்சியின் தாக்கத்தில் ஏற்பட்ட ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். எனினும் இவ்விரு கட்சிகளுக்குமிடையே வித்தியாசம் இல்லையெனக் கூறிவிடமுடியாது.

தமிழ் செட்டி வம்சாவழியைச் சேர்ந்த கிறீஸ்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அரசியலில் இறங்கிச் சில காலத்திலேயே தன்னை ஒரு பௌத்தனாக மாற்றிக் கொண்டார். அதுமட்டுமின்றி கண்டிய "ரதல பிரபுத்துவ" வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமாவோவைத் திருமணம் செய்தார். அதாவது அவர் தன்னை ஒரு சிங்கள பௌத்த தேசியவாதியாக உருவாக்கிக் கொண்டார்.

அதுமட்டுமின்றி தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமிய வைத்தியர்கள், சுயமொழி ஆசிரியர்கள், பௌத்த பிக்குகள், (பஞ்ச லோக பலய) எனப் ஐந்து சக்திகளின் தளமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய கட்சியாகக் கட்டியமைத்தார்.

ஆனால் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு கிறீஸ்தவராக இருந்தும் எவ்வித தயக்கமுமின்றி அவரைத் தமது தலைவராகத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழர், முஸ்லிம்கள் என இருதரப்பினரும் தமிழ் பேசும் மக்களாகத் தமிழரசுக் கட்சியில் இணைந்தமையால் மதம் பற்றிய அக்கறைகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அதேவேளையில் தமிழ்த் தேசியம் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகிய ஏகாதிபத்திய சார்பு சக்திகளை எதிர்த்த போதிலும் தமிழசுக் கட்சி அடிப்படையான அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எப்போதுமே எடுத்ததில்லை.

தமிழசுக் கட்சி தனது பிரசாரங்களின்போது சிங்கள ஏகாதிபத்தியம் என்ற சொல்லைப் பாவித்ததன் மூலமே தாம் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அதன் தமிழ்த் தேசியம் இன எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவே அமைந்திருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியமும் அதன் உள்ள10ர் பிரதிநிதிகளான ஐ.தே.கட்சியுமே இன ஒடுக்குமுறையின் ஆதிமூலங்களாக இருந்தபோதிலும் தமிழரசுக் கட்சி தம்மைப் போன்ற சிங்கள தேசிய சக்திகளையே எதிரிகளாகக் காட்டியது. அதற்கான காரணம் தமிழ்த் தலைமைகளிலிருந்து இடதுசாரி எதிர்ப்புணர்வாகவும் இருக்கலாம்.

பின்னாட்களில் தமிழரசுக் கட்சி இழைத்த பாரிய தவறுகளுக்கு இதுவே காரணமெனக் கருதப்படுகிறது. ஆனாலும் வன்னியசிங்கம் மற்றும் அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், வி.நவரத்தினம், துரைரத்தினம், செ.இராஜதுரை, புதுமைலோலன், எம்.எம்.ஏ.முஸ்தபா மன்சூர் மௌலானா போன்ற இரண்டாவது மட்டத்தலைவர்களின் பேச்சாற்றலும் கொள்கைப் பற்றும் தமிழ்த் தேசிய உணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் கொழுந்து விட்டெரியச் செய்தது என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.

எனவே சிங்கள தேசிய எழுச்சியின் சின்னமாக ஸ்ரீலங்கா சுதந்தி;ரக் கட்சியும் தமிழ்த் தேசிய எழுச்சியின் சின்னமாகத் தமிழரசுக் கட்சியும் 1952 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் களமிறங்கின.

ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 45 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளிலேயே வெற்றிபெற்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டு 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார். அதைப் பாவித்து பல சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஐக்கிய முன்னணியை உருவாக்கித் தன் தேசிய எழுச்சியை முன்னெடுத்தார். அதன் காரணமாக 1956ல் ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களை மட்டுமே பெறுமளவுக்கு அதைத் தோற்கடித்து வெற்றி பெற்று இலங்கையில் மூன்றாவது பிரதமரானார்.

அதேவேளையில் தமிழரசுக் கட்சியினால் பரந்தளவில் தமிழ்த் தேசிய உணர்ச்சி கட்டியெழுப்பப்பட்ட போதிலும் அக்கட்சியாலும் 1952ல் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட நடேசனால் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயம் தோற்கடிக்கப்பட்டார். அதாவது ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமஷ்டி என்பது சுயாதிபத்தியமுள்ள அலகு அல்லவென்றும் உள்ள10ராட்சி சபைகளை விடச் சற்று கூடுதலான அதிகாரம் கொண்ட சபையே எனவும் செய்த பிரசாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டி தொடர்பான சந்தேகங்களை எழுப்பியிருக்கலாம். அத்தேர்தலில் தமிழ் காங்கிரஸ் பேரில் 4 பேர் வெற்றி பெற்றனர். ஐ.தே.கட்சி ஆட்சியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மீன்பிடி அமைச்சராகவும் நடேசன் தபால், தந்தி அமைச்சராகவும் சுந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராகவும் பதவி பெற்றனர்.

ஆனால் 1952 தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டதுடன் அதன் தலைவர் எஸ்.ஜே.வி. தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் சோர்ந்து விடவில்லை. அமிர்தலிங்கம், வி.நவரத்தினம், செ.இராசதுரை, மன்சூர் மௌலானா, வன்னியசிங்கம் போன்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் கிராமம், கிராமமாகச் சென்று கூட்டங்களை நடத்தியும் கிளைகளை உருவாக்கியும் தமிழ்த் தேசிய எழுச்சியை முன்னெடுக்கும் பலமான சக்தியாகத் தமிழரசுக் கட்சியைக் கட்டியெழுப்பினர்.

அதன்காரணமாக 1956 தேர்தலில் தமிழசுக் கட்சி 8 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற தமிழ்க் காங்கிரஸால் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே பெறமுடிந்தது.

அதையடுத்து தமிழரசுக் கட்சி தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், 1961ல் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் போன்ற மக்கள் போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி அவற்றை ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியாக முன்னெடுப்பதில் தமிழரசுக் கட்சியின் சாதனைகள் ஒப்பற்றவையாகும்.

அவ்வாறு சமஷ்டிக் கோரிக்கையின் அடிப்படையில் கட்சியால் வளர்க்கப்பட்ட தமிழ் தேசிய உணர்வே தனி நாட்டுக் கோரிக்கையாக பரிணாமம் பெற்றுத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமாக விரிவடைந்தது. எனவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகத்தையே தலையிட வைக்குமளவுக்குச் சக்தி பெற்று வளர்ந்தது என்றால் அதற்குத் அடித்தளமாக அமைந்தது தமிழரசுக் கட்சி கட்டியெழுப்பிய தமிழத் தேசிய எழுச்சியே காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE